2029. | ‘கங்கையாளொடு கரியவள், நாமகள், கலந்த சங்கம் ஆதலின், பிரியலென்; தாமரைச் செங்கண் அம் கண் நாயக! அயனுக்கும், அரும் பெறல் தீர்த்தம்; எங்கள் போலியர் தரத்தது அன்று; இருத்திர் ஈண்டு’ என்றான். |
‘கங்கையாளொடு - கங்கா நதியுடனே; கரியவள் - யமுனையும்; நாமகள்- சரஸ்வதி நதியும்; கலந்த - கூடிய; சங்கம் - கூடல் (பிரயாகை); ஆதலின் - ஆகையால்; பிரியலென் - இதை விட்டு நீங்காமல் இருக்கின்றேன்; தாமரைச் செங்கண் அம் கண் நாயக! - தாமரை போலும் சிவந்த கண்களைப் பெற்றுள்ள அருளுடையஇராமனே; அயனுக்கும் - பிரம தேவனுக்கும்; அரும் பெறல் தீர்த்தம் - கிடைத்தற்கரிய (புண்ணிய) தீர்த்தமாகும்; எங்கள் போலியர் தரத்தது அன்று -எம்போன்ற முனிவர்களது தன்மையில் அடங்குவது அன்று இதன் பெருமை; ஈண்டு இருத்திர்’ -இங்கேயே நீங்களும் இருப்பீர்களாக;’ என்றான் -. கங்கையும் யமுனையும் கட்புலனுக்கு எட்டாமல் சரசுவதி நதியும் கூடிய திரிவேணி சங்கமம் என்னும் பிரயாகை விசேட தீர்த்தமாகும். தீர்த்த மகிமை கூறிஇராமனைத் தங்க வேண்டினான். |