இராமன் அங்குத் தங்க இயலாமை கூறுதல் 2030. | பூண்ட மா தவன், அம் மொழி விரும்பினன் புகல, ‘நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு’ நெடு நாள், மாண்ட சிந்தைய! இவ் வழி வைகுவென் என்றால், ஈண்ட யாவரும் நெருங்குவர்‘ என்றனன் இராமன். |
பூண்ட மாதவன் - மேற்கொண்ட தவத்தை உடைய பரத்து வாசன்; அம்மொழி -மேற் சொல்லிய வார்த்தைகளை; விரும்பினன் புகல - அன்பொடு கூற; இராமன்-; நெடுநாள் மாண்ட சிந்தைய! - நீண்ட நாளாகத் தவத்தின் மேற்சென்ற’ பெருமை பெற்றமனத்தினை உடைய முனிவ!; இது - இந்த இடம்; நிறை புனல் நாட்டுக்கு -நிறைந்த நீர்வளம் உடைய எனது கோசல நாட்டுக்கு; நீண்டது அன்று - நெடுந்தொலைவில் உள்ளது அன்று; இவ் வழி - இவ் விடத்தில்; வைகுவென் என்றால் - தங்கியிருப்பேனாயின்; யாவரும் - கோசல நாட்டு மக்கள் யாவரும்; ஈண்ட - விரைவாக; நெருங்குவர் - என்னை வந்து அடைந்துவிடுவார்கள்;’ என்றனன் -. நாட்டுக்கு மிக அருகில் தங்கினால் நாட்டு மக்கள் அடிக்கடி வருவர்; ஆதலின் அது தன்தவத்திற்கும் இடையூறாகும்; முனிவர்களின் கடமைகளுக்கும் இடையூறாகும் என்று புலப்படுத்திமறுத்தான் இராமன். 32 |