இலக்குவன் தெப்பம் அமைத்து இருவரையும் அக்கரை சேர்த்தல்  

2034. வாங்கு வேய்ங் கழை துணித்தனன்;
     மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து,
     அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல்
     தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி,
     இரு கையால் நீந்தி,.

     (இளையோன்) வாங்கு வேய்ங்கழை துணித்தனன் - வளையும்
தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மாணையின் கொடியால் -
மானைக் கொடிகளைக் கொண்டு; ஒங்குதெப்பம் ஒன்று அமைத்து -
உயர்ந்த தெப்பம் ஒன்றைக் கட்டி; அதன் உம்பரில் -அதன்மேல்; உலம்
போல் வீங்க தோள் அண்ணல் -
திரண்டு உருண்ட கல்லைப் போலப்
பருத்த தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப -
சீதாபிராட்டியுடனேஇனிமையாகத் தங்கியிருப்ப;  அந்த நெடு நதி -
அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி - தன் இரு
கையாலும் நீந்தி;  நீங்கினான் - கடந்தான்.

     தெப்பத்தைத் தள்ள வேண்டும் ஆதலின் இலக்குவன் அது செய்தான்
என்பார் நீந்திக்கடந்தான் என்றார்.                               36