2035. | ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் மாலை மால் வரைத் தோள் எனும் மந்தரம் திரிய, காலை வேலையைக் கடந்தது, கழிந்த நீர் கடிதின்; மேலை வேலையில் பாய்ந்தது, மீண்ட நீர் வெள்ளம். |
ஆலை பாய் வயல் - கரும்பாலையிலிருந்து கருப்பஞ்சாறு பாய்கின்ற வயல்களை உடைய;அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் - அயோத்திநகரத்தில் உள்ளார்க்கு ஆண்களிற்சிறந்தவனாகிய இராமனுக்குத் தம்பியாய இலக்குவன்; மாலை மால்வரைத் தோள் எனும் மந்தரம் திரிய - மாலை அணிந்த பெரிய மலை போன்ற தோளாகிய மந்தரமலையானது மாறி மாறிநீரைத்தள்ள; கழிந்த நீர் - கையால் தள்ளப்பட்ட நீரானது; காலை வேலையைக்கடிதின் கடந்தது - சூரியன் உதிக்கும் காலைக் கடலாகிய கீழ்க்கடலை விரைவாகக் கடந்து அப்பால் சென்றது; மீண்ட நீர் வெள்ளம் - தெப்பத்தால் மீண்டுசென்ற நீர்ப்பெருக்கு;கடிதின் மேலை வேலையின் பாய்ந்தது - விரைவாக மேற்குத் திசையில் உள்ள கடலிற்பாய்ந்து சென்றது. கையால் தள்ளிய நீர் கீழ்க்கடலைக் கடக்க, தெப்பத்தால் விடுபட்ட நீர் மேற் கடலைஅடைந்தது என்றவாறாம். ‘கடிதின்’ என்பதனை இரண்டுக்கும் கூட்டுக. 37 |