பின்னர் ஒரு பாலை நிலத்தை அடைதல்  

2036. அனையர், அப் புனல் ஏறினர்;
     அக்கரை அணைந்தார்;
புனையும் வற்கலைப் பொற்பினர்
     நெடு நெறி போனார்;
சினையும் மூலமும் முகடும்
     வெந்து, இரு நிலம் தீய்ந்து,
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர்
     நெடுஞ் சுரம் நேர்ந்தார்.

     புனையும் வற்கலைப் பொற்பினர் - அணிந்து. கொண்டுள்ள
மரவுரியாலாகிய அழகியஆடையுடைய அவர்கள்; அனையர் -
அப்படிப்பட்டவர்களாய்; ஆப்புனல் ஏறினர் -அந்த யமுனை நீரைக்
கடந்தார்; அக்கரை அணைந்தார் - எதிர்க்கரையைச்சென்றடைந்தார்கள்;
நெடு நெறி போனார் - நீண்ட வழியைக் கடந்து சென்று;  சினையும்
மூலமும் முகடும் வெந்து -
கிளைகளும் வேறும், உச்சியும் தீய்ந்து;  இரு
நிலம்தீய்ந்து -
பெரிய நிலம் கருகி; நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர்
நெடுஞ் சுரம் -
நினைக்கின்ற மனமும் சுடுவதாகிய ஒரு பெரிய பாலை
நிலத்தை;  தேர்ந்தார் -அடைந்தார்கள்.

     ‘வற்கலைப் பொற்பினர் அனையர்’ - எனக் கூட்டினும் அமையும்.
மூலம் என்பது கிழங்கு, அது வேரின்கண் உள்ளது; ஆதலின் வேர் என
உரைக்கப்பட்டது. முகடு - மரத்தினது உச்சி, பூ, தளிர், காய், கனி இவை
உள்ள பகுதி யாம்.                                             38