2043.எயினர் தங்கு இடம் இருடிகள்
     இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும், மணி நிறக்
     கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும், பரிந்தன
     பேடையைப் பயிலும்
குயில் இரங்கின; குருந்தம் நின்று
     அரும்பின முருந்தம்.

     எயினர்தங்கு இடம் - வேடர்கள் தங்கும் குறிச்சிகள்; இருடிகள்
இருப்பிடம்ஏய்ந்த -
தவமுனிவர்களது  தவச்சாலையைப் போல ஆயின;
வயின் வயின்தொறும் -பக்க இடங்களில்எல்லாம்; மணி நிறக்
கோபங்கள் மலர்ந்த -
செம்மணி போன்றநிறமுடைய இந்திர கோபப்
பூச்சிகள் தோன்றின;  பயில் மரம் தொறும் -நெருங்கியுள்ளமரங்களில்
எல்லாம்;  பரிந்தன பேடையைப் பயிலும் -தம்மைப் பிரிந்து
இரங்கினவாயபெண்குயில்களை அழைக்கின்ற;  குயில் -ஆண்குயில்கள்;
இரங்கின - இரங்கிக்கூவின;  குருந்தம்- குருந்த
மரங்கள்; முருந்தம்-
மயிலிறகின் அடிபோல;  நின்று அரும்பின - அரும்புகளைத்தந்தன.

     முருந்து - மயிலிறகின் அடி.  அது  குருந்த மரத்து  அரும்புக்கு
உவமை. பயிரும் என்றிருத்தல் சிறப்பு; சங்க நூல்களில் இதுவே சொல்.  45