இராமன் சீதைக்குச் சித்திரகூட மலையின் இயற்கை அழகுகளைக் காட்டி மகிழ்தல் கலிநிலைத்துறை 2046. | நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து, ஒரு நெறி நின்ற அனகன், அம் கணன், ஆயிரம் பெயருடை அமலன், சனகன் மா மடமயிற்கு அந்தச் சந்தனம் செறிந்த கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுறக் காட்டும். |
நினையும்- (எல்லாராலும்) நன்கு மதிக்கப்படுகின்ற; தேவர்க்கும்- தேவர்களுக்கும்; நமக்கும் -சாமானியர்களாகிய நமக்கும்; ஒத்து - ஒரு தன்மைப்பட்டு; ஒரு நெறி நின்ற - சம நிலையில்நிற்கின்ற; அனகன் - குற்றம் இல்லாதவனும்; அம்கணன் -அழகிய (அருளால் நிறைந்த) கண்களை உடையவனும்; ஆயிரம் பெயர் உடை அமலன் -ஆயிரம் திருநாமங்களைப் பெற்றுள்ள இயல்பாகவே பாசங்களில்நீங்கியவனும் ஆகிய இராமன்; சனகன் மா மடமயிற்கு -சனகன்மகளாகிய பெருமையுடைய இளமை வாய்ந்த மயில் போலும் சாயலள் ஆகிய சீதைக்கு; சந்தனம் செறிந்த - சந்தன மரங்கள் நெருங்கியுள்ள; அந்தக்கனக மால் வரை - அந்தப் பொன் மயமான பெரிய சித்திரகூட மலையினது; இயல்பு எலாம் - தன்மை நலங்கள் எல்லாவற்றையும்; தெரிவுஉற - விளங்கும்படி; காட்டும் - காண்பிப்பான் ஆயினன். ‘நினையும்’ என்பதற்கு எப்பொழுதும் தன்னையே நினைந்து கொண்டுள்ள என்று பொருள் கோடல் சிறப்பு. தன்னை இடையறாது நினையும் நித்யசூரிகளாய தேவர்களுக்கும், எப்பொழுதும் நினையாது ஒரோவழி நினையும் மக்களாகிய நமக்கும் தனது சில குணத்தாலே ஒரு நீர்மையுடையவனாய் நித்ய விபூதியிலும் லீலா விபூதியிலும் இன்பம் ஆர்ந்து இருக்கச் செய்கின்ற பெருநிலை நோக்கி, ‘நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து’ என்றார். ‘நினையும் தேவர்’ என்றது நித்ய சூரிகளை ஆம், எப்பொழுதும் இறைவனை நினைதலே தமது வாழ்வாக உடையர் அவராதலின், “என்னும் நம்மாழ்வார் திருவிருத்தத்துள் (21) விண்ணோர்கள் என்றவிடத்து ‘நித்ய சூரிகள்’ என்று பொருள் உரைத்தவாறும் காண்க. இவ்வுலகத்துத் திருவவதாரத்தில் மனிதர்களைப் போல இன்ப துன்பம் உடையவனாய் இயங்கினும் என்றும் எங்கும் எவற்றாலும் பற்றப்படாத அவனது பரத்துவத்தை விளக்கவே ‘அனகன்’, ‘அமலன்’ என்று கூறினார். அம்கண் - அழகிய கண். அருளுடைய கண் என்றவாறாம். ‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்’ என்றார் வள்ளுவரும். (குறள். 575.) 1 |