2048. | ‘குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே! மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை, சுருதிபோல் தெளி மரகதக் கொழுஞ் சுடர் சுற்ற, பருதி வானவன் பசும் பரி புரைவன - பாராய்! |
குருதி வாள் எனச் செவ் அரி பரந்த கண் குயிலே! - இரத்தம் தோய்ந்த வாள்போலச் சிவந்த இரேகைகள் படரப் பெற்ற கண்களையுடைய குயில் போலும் குரலுடையாளே!; மால்வரை உம்பரில் மருவி - பெரிய மலையின் உச்சியில் பொருந்தி; குதிக்கின்ற வருடை -குதிக்கின்ற மலை ஆடு; சுருதி போல் தெளி மரகதக் கொழும் சுடர் சுற்ற - வேதம் போலத் தெளிந்து விளங்குகின்ற மரகதக் கல்லின் கொழுவிய பேரொளி கலக்கப் பெறுதலால்; பருதி வானவன் - சூரிய தேவனது; பசும்பரி புரைவன - பச்சை நிறக் குதிரைகளைஒப்பன; பாராய்! - காண்பாயாக. மலை மேல் உள்ள மரகத மணிகளின் ஒளி சுற்றப்பெற்ற மலை ஆடுகள் சூரியனின் பச்சை நிறக்குதிரைகளைப் போலத் தோற்றம் அளிக்கின்றன. சுருதி போல் தெளி மரகதம் என்றது வேதம்தெளிந்த ஒளி உடைய மரகதக்கல் என்றவாறாம். இனி, மரகத நிறம் உடைய திருமாலை வேதம்உணர்த்துதல் போல மரகதக் கல்லும் அத்திருமாலை நினைப்பூட்டுகிறது என்பாரும்உளர். 3 |