2050. | ‘உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே! துவரின் நீள் மணித் தடம்தொறும் இடம்தொறும் துவன்றி, கவரி மால் நிற வால் புடை பெயர்வன, கடிதின் பவள மால் வரை அருவியைப் பொருவிய - பாராய்! |
உவரி வாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே!- உப்புக் கடல் அல்லாமல் சுவைஇனிதாகிய திருப்பாற்கடல் தந்த அமுதம் போன்றவளே!; துவரின் நீள் மணித் தடந் தொறும்இடம் தொறும் துவன்றி - பவள மணியால் ஆகிய மலைத் தாழ்வரைகளிலும் மற்றும் உள்ளஇடங்களிலும் நெருங்கி; கவரி மான் - கவரிமான்களின்; நிறவால் -வெண்ணிறம் உடைய வால்கள்; புடை பெயர்வன - அசை கின்றனவாகிய அவை; கடிதில் -வேகமாக ஓடுகின்ற; பவள மால் வரை அருவியைப் பொருவிய - பவள மாலையின் மேலிருந்துவீழ்கின்ற வெண்ணிற அருவிகளைப் போன்றுள்ளன; பாராய் - காண்பாயாக. கவிஞர்கள் பாற்கடலையும் உவர்க்கடலையும் கடல் என்னும் சாதி பற்றி ஒன்றாகவே கொண்டு‘கடலில் தோன்றியவள்’ என்று பொதுவாகத் திருமகனைக் கூறுவராதலின், இங்கு ‘உவரி வாயன்றிப்பாற்கடல் உதவிய அமுதே’ என்றாராம். ‘துவரின் நீள்மணி’ என்பதற்குத் துவர் போல நீண்ட மணிஎன்றும், துவரினும் ஒளியுடைய மணி என்றும் பொருள் உரைக்கலாம். துவர் -பவளம். 5 |