2055. | ‘உருகு காதலின் தழைகொண்டு மழலை வண்டு ஓச்சி, முருகு நாறு செந் தேனினை முழைநின்றும் வாங்கி, பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை, பருக, வாயினில், கையின்நின்று அளிப்பது - பாராய்! |
பிறை மருப்புஒரு யானை - பிறைமதி போன்ற தந்தத்தை உடைய ஒரு களிற்றியானை;பெருகு சூல் இளம் பிடிக்கு -முதிர்ந்த கருப்பத்தையுடைய இளைய (தன் பெண் யானைக்கு; உருகு காதலின்- மனம் உருகுதற்குக் காரணமான அன்பினால்; தழைகொண்டு மழலை வண்டுஓச்சி - தழைகளைக் கொண்டு இனிய குரல் உடைய வண்டுகளை ஓட்டி; முருகு நாறு - மணம்வீசுகின்ற; செந்தேனினை- ; முழை நின்றும் வாங்கி - மலைக் குகையிலிருந்தும்எடுத்து; வாயினில்பருக - வாயால் பருகும்படி; கையின் நின்று -தனது கையிலிருந்து; அளிப்பது- கொடுப்பதனை; பாராய் - காண்பாயாக. சிறிதே வளைந்த தந்தம் பிறை மதி போலும், யானை இனங்களின் அன்புச்செறிவைஇப்பாடல் மூலம் அறியலாம். “பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன் நின்று, இரு கண் இளமூங்கில்வாங்கி - அருகிருந்த, தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்”, “வரை செய் மாக்களிறு இள வெதிர வளர்முளை அளைமிகுதேன் தோய்த்துப், பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள் செய்யும் பிரிதி(திவ்ய.2256, 962.) என்னும் ஆழ்வார் திருமொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. 10 |