2056.‘அளிக்கும் நாயகன் மாயை புக்கு
     அடங்கினன் எனினும்,
களிப்பு இல் இந்தியத்து யோகியைக்
     கரக்கிலன்; அதுபோல்,
ஒளித்து நின்றுளர் ஆயினும்
     உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக
     மாக்களைப் - பாராய்!

     அளிக்கும் நாயகன் - (உலகினைக்) காக்கும் தெய்வமாகிய திருமால்;
மாயைபுக்கு அடங்கினன் எனினும் - மாயையில் புகுந்து (தன் தன்மை
பிறர்க்கு அறிய முடியாதபடி)மறைந்து அடங்கி நின்றான் என்றாலும்;
களிப்பு இல் இந்தியத்து - புலன் வழி சென்றுகளித்தல் இல்லாத
பொறிகளை உடைய;  யோகியை - யோக சித்தியால் சிறந்ததவத்தரை;
சுரக்கிலன் - ஒளிக்க மாட்டான்;  அதுபோல் - அதுபோலவே;  ஒளித்து
நின்றுளர் ஆயினும் -
உலகத்தார்க்குத் தம்மைக் காட்டாது ஒளித்து
நின்றிருக்கின்றார்கள் ஆனாலும்; உருத்தெரிகின்ற பளிக்கு அறை -
தம்மிடத்தேஉள்ளவற்றின் உருவத்தைத் தெளிவாகக் காட்டுகின்ற
பளிங்குப்பாறையிலே (காணத் தோன்றும்); சில பரிமுக மாக்களை - சில
குதிரை முகம் உடைய கின்னரர்களை; பாராய் - பார்ப்பாயாக.

     திருமால் மாயையால் மறைந்து  நின்று பிறரால் அறிய வொண்ணா
விடினும்,  யோகியர்க்குஅவன் தன்னை மறையான்.  பரமன் மாயையால்
ஒளித்தவன் என்பதைக் கருடன் துதியால் (8252 - 62)உணர்க.  பரிமுக
மாக்கள் - குதிரை முகம் உடையவர் கின்னரர் ஆவர். உலகோர்க்குத்
தம்மைக்காட்டாது மறைப்பர். ஆயினும், பளிங்குப் பாறையில் அவர் உரு
வெளித்தோன்றும் என்க.பளிங்கில் மறைந்த உருத் தோன்றுதலை
மணிமேகலை பளிக்கறை புக்க காதை யான்உணர்க.                  11