2061. ‘சீலம் இன்னது என்று அருந்ததிக்கு
     அருளிய திருவே!
நீல வண்டினம் படிந்து எழ,
     வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள்.
     பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன
     நிகர்ப்பன - காணாய்!

     சீலம் இன்னது  என்று அருந்ததிக்கு அருளிய திருவே! -
(கற்புடைய மடந்தையரின்)நல்லொழுக்கம் இவ்வாறானது என்று
அருந்ததிக்குக் காட்டிய திருமகளே!; கோல வேங்கையின்கொம்பர்கள்-
அழகிய வேங்கை மரத்தின் பூங்கிளைகள்;  நீல வண்டினம் படிந்து எழ-
நீல நிறமான வண்டுக் கூட்டங்கள் தம்மேல் உட்கார்ந்து எழுதலினால்;
வளைந்து  உடன்நிமிர்வ - கீழே வளைந்து பிறகு மேலே நிமிர்வன;
பொன்மலர் தூவி - பொன்னிறமலர்களைத் தூவி; காலினில் -
பாதங்களில்; தொழுது எழுவன - வணங்கிஎழுகின்றவற்றை; நிகர்ப்பன-
ஒத்திருக்கும் அவற்றை; காணாய்-.

     பிராட்டியின் திருவடிகளில் பொன்னிறமான வேங்கை மலர்களைத்
தூவி வழிபட்டு எழுவனஎன்றதனால் இது தற்குறிப்பேற்றவணியாம்.      16