2063. | ‘வரி கொள் ஒண் சிலை வயவர்தம் கணிச்சியின் மறித்த பரிய கால் அகில் சுட, நிமிர் பசும் புகைப் படலம், அரிய வேதியர், ஆகுதிப் புகையொடும் அளவி, கரிய மால் வரைக் கொழுந்து எனப் படர்வன - காணாய்! |
வரிகொள் ஒண்சிலை வயவர் - கட்டமைந்த ஒள்ளிய வில்லை உடைய வீரர்கள்; தம் கணிச்சியின் மறித்த - தம்முடைய கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்திய; பரியகால் அகில் கூட - பருத்த கரிய நிறமுள்ள அகில் கட்டையைச் சுடுதலால்; நிமிர் பசும்புகைப்படலம் - மேல் செல்லுகின்ற அடர்ந்த புகைத் தொகுதி; அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவி - சொல்லுதற்கரிய புகழ் படைத்த அந்தணர்களது ஓம குண்டத்திலிருந்து எழுகின்ற புகையோடும் கலந்து; கரிய மால்வரைக் கொழுந்து எனப் படர்வன - கரியநிறமுள்ள பெரிய மலைச்சிகரங்களைப் போல வானத்தில் படர்ந்து செல்லுகின்றவற்றை; காணாய் -. வேடுவர் அகில் சுட்ட புகைம், வேதியர் வேள்விப் புகையும், ஒன்று கலந்து மலைச்சிகரம் போல் உள்ளது என்பதால் மறமும் அறமும் கலந்து விளங்குவதைக்குறிப்பிட்டார். 18 |