2065.‘மஞ்சு அளாவிய மாணிக்கப்
     பாறையில் மறைவ,
செஞ்செவே நெடு மரகதப்
     பாறையில் தெரிவ.
விஞ்சை நாடியர் கொழுநரோடு
     ஊடிய விமலப்
பஞ்றசு அளாவிய சீறடிச்
     சுவடுகள் - பாராய்!

     விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய - வித்தியாதர உலகத்தில்
உள்ள மகளிர் தம்கணவரோடு ஊடல் கொண்டதனால்;  விமலப் பஞ்சு
அளாவிய சீறடிச் சுவடுகள் -
(கோபத்தில்நடந்த) அவர்களது  குற்றமற்ற
செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிறிய பாதங்களின் சுவடுகள்;மஞ்சு
அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ -
மேகங்கள் நெருங்கியுள்ள
மலைமேல் உள்ளமாணிக்கப் பாறைகளில் மறைகின்றன; செஞ்செவே நெடு
மரகதப் பாறையில் தெரிவ -
செம்மை யாக நீண்ட பச்சை நிறமுள்ள
மரகதப் பாறைகளில் நன்கு தோன்றுகின்றன;  காணாய் -.

     செம்பஞ்சுக் குழம்பு பூசிய அடிச்சுவடுகள் நடந்து  சென்று வழியில்
செந்நிறமுள்ள மாணிக்கப்பாறையில் நிறவேற்றுமை இன்மையால் மறைந்து
விடுகின்றன;  அதே சுவடுகள் பச்சைநிறவேற்றமையால் மரகதப் பாறையில்
நன்றாகத் தெரிகின்றன என்றவாறாகும். ஊடல் கொண்ட  மகளிர்கணவரை
வெறுத்தாற் போன்ற குறிப்புடன் பாறைமேல் நடந்து  சென்றனர். ஆதலின்
செம்பஞ்சுதீட்டிய அவர்களது பாதச் சுவடுகள் பாறையில் தெரிவனவும்
மறைவனவும் ஆயின. செஞ்செவே - நேராக.                        20