2066.‘கழித்த செம்பொனின் தொளைபுரை
     உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு
     இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர்
     அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக
     நறு மலர் - காணாய்!

     அழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! -
கழியாகச் செய்யப்பெற்றசெம்பொன்னால் ஆகிய தொளையை ஒத்திருக்கின்ற
தொப்புளை உடைய இனிய வாழ்க்கைத்துணைவியே!;  கோலம் அழித்து
மேவிய அரம்பையர் -
(அருவியில் நீராட  வந்து)தம்முடைய பழைய
கோலத்தைக் களைத்து நீராடிய அரம்பை மாதர்கள்; அறல்புரை கூந்தல்
கழித்து நீக்கிய -
தமதுத கருமணலை ஒத்த கூந்தலிலிருந்து  எடுத்து
எறிந்த; கற்பகநறுமலர் - கற்பக மரத்தின் மணமுள்ள மலர்கள்; மாமணி
கொழித்த அருவியொடு  இழிவன -
சிறந்த இரத்தினங்களைக்
கொழித்துக்கொண்டு வருகின்ற  மலை அருவியோடு இறங்கிவருவனவற்றை;
காணாய் -.

     கழியும் தொளையுமாகச் செம்பொன்னால் செய்தவை கொப்பூழுக்கு
உவமையாம். தேவஉலகத்தில் உள்ள மாதர் கழற்றி எறிந்த மாலைகளை
வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்ற மலைஅருவிகள் அடித்துக்கொண்டு
வருகின்றன என்பது  கருத்து.                                    21