2067.‘அறை கழல் சிலைக் குன்றவர்
     அகன் புனம் காவல்
பறை எடுத்து, ஒரு கடுவன் நின்று
     அடிப்பது - பாராய்!
பிறையை எட்டினள் பிடித்து, “இதற்கு
     இது பிழை” என்னா,
கறை துடைக்குறும் பேதை ஓர்
     கொடிச்சியைக் - காணாய்!

     ஒரு கடுவன் - ஓர் ஆண் குரங்கு; அறை கழல் சிலைக் குன்றவர்
அகன் புனம்காவல் பறை  எடுத்து  நின்று அடிப்பது
- ஒலிக்கின்ற
வீரக்கழலை அணிந்த வில்லை உடையமலைவாழ்நர்களது அகன்ற
புனத்தைக் காவல் செய்ய வைத்திருக்கின்ற பறையை எடுத்துக் கொண்டு
அடிப்பதனை;  பாராய் -;  பிறையை - இளம்பிறையை;  எட்டினள்
பிடித்து
-கிட்டிப் பிடித்து;  ‘இதற்கு இது பிழை’ என்னா - இப்பிறை
மதிக்கு இக்களங்கம்இருப்பது தவறு என்று கருதி; கறை - களங்கத்தை;
துடைக்குறும் -துடைத்துவிடுகின்ற; பேதை - சிறுமியாகிய; ஓர்
கொடிச்சியை -
ஒரு குறமகளை;  காணாய் -.

     தினைப்புனத்துத் தினை கவர வரும் பறவைகளை ஓட்டக் குன்றவர்
பறை வைத்திருப்பர். அப்பறையை ஓர் ஆண்குரங்கு எடுத்து அடிக்கிறது.
அடுத்து  ஒரு சிறிய குறமகள் பிறையைப் பிடித்துஅதன் களங்கத்தைத்
துடைக்கின்றாளாம். இதனால் பிறைமதியை ஒட்டி மலை உயர்ந்துள்ளது
என்றுசிறப்பித்தவாறு.                                          22