2070. | ‘இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்! அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட, கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன - பாராய்! |
இலவும் - முருக்க மலரும்; இந்திரகோபமும் - இந்திர கோபப் பூச்சியும்; புரை இதழ் - ஒத்திருக்கின்ற (செந்நிறமான) உதட்டை உடைய; இனியோய்! -இனியவளே!; அலவும் நுண் துளி அருவி நீர் - அலை வீசி வருகின்ற நுண்ணிய துளி சிதறும்அருவியின் நீரானது; அரம்பையர் ஆட - வானுலக மகளிர் ஆடுகின்ற காரணத்தால்; கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம், கொடுத்த பலவும் - வாசனைப் பொருள்கள், சந்தனம், சிவந்த குங்குமம், இன்னும் கற்பகமரம் கொடுத்த மணப்பொருள்கள் பலவும்; தோய்தலின் - (அருவிநீரில்) தோயப் பெறுதலால்; பரிமளம் கமழ்வன - நறுமணம்வீசப்பெறுகின்றன; பாராய் -. அருவிநீர் தன் தன்மை இழந்து அரம்பையர் ஆடிய காரணத்தால் அவருடம்பில் பூசியிருந்த மணப்பொருள்கள் தம்மிடத்தே கலக்கப்பெற அதனால் பரிமளம் வீசுகிறது என்பதனால் தேவருலகத்தைத்தொடும் மலை உச்சி அருவிகளின் சிறப்பு உரைத்தவாறாம். இந்திர கோபம் - செந்நிறமுள்ள ஒரு வகைப் பூச்சி, மழைக்காலத்து வரும் - ‘செம்மூதாய்’ எனவும் பெயர் கூறுவர். 25 |