2071. | ‘செம் பொனால் செய்து, குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் கொம்பு தாங்கியது எனப் பொலி வன முலைக் கொடியே! அம் பொன் மால் வரை, அலர் கதிர் உச்சி சென்று அணுகப் பைம் பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது - பாராய்! |
செம்பொனால் செய்து - சிவந்த பொன்னால் செய்து; குலிகம் இட்டு எழுதிய -சாதிலிங்கக் குழம்பினால் தொய்யிலாகப் படம் வரைந்து எழுதிய; செப்பு - சிமிழை; ஓர்கொம்பு தாங்கியது - ஒரு கொம்பு தாங்குகின்றது; எனப் பொலி - என்றுசொல்லுமாறுவிளங்குகின்ற; வனமுலைக் கொடியே - அழகிய முலைகளை உடையகொடி போல்பவளே!; அலர்கதிர் - ஒளி விளங்குகின்ற சூரியன்; அம் பொன்மால்வரை உச்சி சென்று அணுக - அழகிய பொன் மயமான பெரிய மலையின் உச்சியில் சென்றுசேர; பைம்பொன் மாமுடி மிலைச்சியது ஒப்பது - அம்மலைக்குப் பசிய பொன்னால் பெரியமகுடம் சூட்டியது போல் உள்ளதனை; பாராய் -. சூரியன் உச்சிப் போதில் மலை உச்சியை வந்து அடைகிறபோது மலைக்குப் பொன் மகுடம்சூட்டியதுபோல் தோற்றம் அளிக்கிறது. செப்பின் மேல் வண்ணக்கோலம் எழுதுதல் உண்டாதலின் அதுதொய்யில் எழுதிய முலைக்கு ஒப்பாயிற்று. வனம் - அழகு. 26 |