2072.‘மடந்தைமார்களில் திலதமே!
     மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில், வேயினம்
     சொரி கதிர் முத்தம்
இடம்தொறும் கிடந்து இமைப்பன,
     எக்கு இளஞ் செக்கர்
படர்ந்த வானிடை, தாரகை
     நிகர்ப்பன - பாராய்!1

     மடந்தைமார்களில் திலதமே! - பெண்களில் திலகம் போலச்
சிறந்தவளே!;  மணி நிறத்திணி கல் தொடர்ந்த பாறையில் -
செம்மணியால் ஆகிய (சிவந்த) நிறத்தைஉடைய திணிந்த கல்
பரவியிருக்கின்ற மலைப் பாறையில்; வேய் இனம் சொரிகதிர் முத்தம்-
மூங்கில் கூட்டம் சொரிந்த ஒளிபடைத்த முத்துகள்; இடம் தொறும்
கிடந்து  இழைப்பன-
அங்கங்கே (பாறைகளின் இடை இடையே) கிடந்து
ஒளி வீசி விளங்குகின்றன; எக்குஇளஞ்செக்கர் வானிடை - மேலேறிப்
படர்ந்த இளைய செவ்வானத்திடத்து; தாரகைநிகர்ப்பன -
நட்சத்திரங்களை ஒத்து  விளங்குகின்றன;  பாராய்-.

     செம்மணிக் கற்பாறையில் இடையிடை பரவிச் சிதறிக் கிடக்கும்
மூங்கில் முத்துக்கள்செவ்வானத்து விண்மீண்களைப் போல் உள்ளன.
எக்குதல் - மேல் ஏறுதல் - இனி மிகுதல் என்னும்பொருள் உடைய
தெலுங்குச் சொல் என்பது  ஒன்று.                                27