2073. | ‘குழவு நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே! முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த பழுவம், வெங் கனல் கதுவியது ஒப்பன - பாராய்! |
நுண் தொளை குழுவும் வேயினும் - நுண்ணிய தொளை நிரம்பப் பெற்ற புல்லாங்குழல்ஓசையினும்; குறி நரம்பு எறிவு உற்று எழுவு தண்தமிழ் யாழினும் - ஓசையைக் குறித்து(எழுப்பவல்ல) நரம்புகளை (கை விரல்களால்) தடவி எழுப்பப்படுகின்ற குளிர்ந்த இனிய யாழ்ஓசையினும்; இனிய - இனிமையான; சொல் கிளியே - சொற்களைப் பேசுகின்ற கிளிபோல்பவளே!; முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு - முற்றிலும் பூக்கள் பூத்துள்ளஅடிமரத்தை உடைய முருக்க மரம்; இடை மிடைந்த பழுவம் - இடையே நெருங்கி உள்ள காடு; வெங் கனல் கதுவியது ஒப்பன- கொடிய நெருப்பினால் பற்றப்படுள்ளது போன்றவற்றை;பாராய்-. முருக்கமலர் செந்நிறம் உடையது ஆதலின், முழுதும் மலர் பூத்த முருக்க மரம் நிரம்பியுள்ளகாடு தீப்பிடித்தது போலத் தோன்றுவது இயற்கையாகும். 28 |