2075.‘வடுவின் மா வகிர் இவை எனப்
     பொலிந்த கண் மயிலே!
இடுகு கண்ணினர், இடர் உறு
     மூப்பினர் ஏக,
நெடுகு கூனல் வால் நீட்டின,
     உருகுறு நெஞ்சக்
கடுவன்,  மா தவர்க்கு அரு நெறி
     காட்டுவ - காணாய்!1

     இவை மா வடுவின் வகிர் எனப் பொலிந்த கண் மயிலே! -
இவை மாம் பிஞ்சுகளின்பிளப்பு என்று  சொல்லும்படியாகப் பொலிந்த
கண்களை உடைய மயில் போல்பவளே!;  இடுகுகண்ணினர் - இடுங்கிப்
போன கண்களை உடையவரும்; இடர் உறுநெஞ்சினர் - துன்பம்உறுகின்ற
நெஞ்சத்தை உடையவரும் ஆகிய முனிவர்கள்; ஏக- செல்ல; மாதவர்க்கு-
அம்முனிவர்களுக்கு; நெடுகு கூனல் வால் நீட்டின - நீண்டு வளைந்த
வாலை நீட்டியவையாய்; உருகு உறு நெஞ்சக் கடுவன் - உருகுகின்ற
மனம் உடைய ஆண்குரங்கு; அரு நெறிகாட்டுவ - மலையிடத்து அரிய
வழியினைக் காட்டுகின்றவற்றை;  காணாய். -.

     மூப்படைந்து, கண் இடுகி, வழியறிந்து செல்ல இயலாது வருந்துகிற
மாதவர்களுக்கு மலையில்உள்ள ஆண் குரங்குகள் இரங்கி அன்பு
கொண்டு வழிகாட்டிச் செல்கின்றன என்பது சித்திரகூடமலையில் உள்ள
உயிரினங்களின் கருணை இயல்பினைக் கூறிய வாறாகும்.              30