கோசலையின் அடியில் பரதன் வீழ்ந்து வணங்கல்  

2190.ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்;
மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ!

     ஆண்தகை - ஆடவருள் சிறந்த பரதன்; மீண்டு - கைகேயி
இருப்பிடத்திருந்துசென்று; கோசலை அருகர் எய்தினன் - கோசலைத்
தாயின் அருகில் சென்று; மண்கிழிதர வீழ்ந்து - தரை பிளவுபடும்படி
(தடாலெனக்) கீழே வீழ்ந்து வணங்கி; கேழ்கிளர்- நிறம் மிக்கு விளங்குகின்ற;
காண்தகு தடக்கையின் - காண்பதற்குப் பொருந்திய நீண்டகைகளால்;
கமலச் சீறடி - (கோசலையின்) தாமரைபோன்ற சிறிய பாதங்களை;
பூண்டனன்கிடந்தனன் புலம்பினான்- பிடித்துக் கொண்டு (கீழேவிழுந்து)
கிடந்தபடியே அழத்தொடங்கினான்.

     ‘அரோ’ ஈற்றசை. ‘மீண்டு’ என்பதை மாறிச் சேர்க்காது.  நேரே
சேர்த்துத் திரும்பவும்மண்கிழிதர வீழ்ந்தான் என்றும் பொருள் கூறலாம்.
இப்பொருளில் வரும்போது பரதன் வந்தவுடன்வீழ்ந்து  வணங்கினான்,
திரும்பவும் கோசலை திருவடியில் வீழ்ந்தான் என்று உரைத்தல்வேண்டும்.
அருகர் - ஈற்றுப் போலி.                                      89