2077.‘அலம்பு வார் குழர் ஆய் மயில்
     பெண் அருங்கலமே!
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு
     இயைவுற நாடி,
சிலம்பி, பஞ்சினில், சிக்கு அறத்
     தெரிந்த நூல், தே மாம் -
பலம் பெய் மந்திகள் உடன் வந்து
     கொடுப்பன - பாராய்!

     அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அருங்கலமே! -
அசைகின்ற நீண்ட கூந்தலைஉடைய அழகிய மயில் போன்ற பெண்களுக்கு
அணிகலமாய் விளங்குகின்றவளே!;  நலம் பெய்வேதியர் - நன்மையைச்
செய்கின்ற அந்தணர்கள்;  மார்பினுக்கு - மார்பில்அணிவதற்கு;  இயைவு
உற -
பொருந்த;  நாடி - ஆராய்ந்து;  தேமாம் பலம்பெய்மந்திகள் -
தேமா மரத்திலிருந்து பழங்களைக் கீழே சிதறுகின்ற இயல்பை உடைய
குரங்குகள்;  சிலம்பி பஞ்சினில் - பட்டுப் பூச்சி, பஞ்சு இவற்றால் ஆகிய;
சிக்கு அறத் தெரிந்த நூல் - சிக்கில்லாதபடி ஆராய்ந்து கொண்டுவந்த
நூலை; உடன் வந்து- விரைந்து வந்து; கொடுப்பன - கொடுக்கின்றவற்றை;
பாராய் -.

     அந்தணர் முப்புரிநூல் அணிதற்கு மந்திகள் பட்டுப்பூச்சி பஞ்சு
ஆகியவற்றில் இருந்துசிக்கில்லாத நூலைத் தேர்ந்து கொடுத்து உதவி
செய்கின்றன என்பதும் மேலது போன்றதே.                        32