2078. | ‘தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே! பெரிய மாக் கனி, பலாக் கனி, பிறங்கிய வாழை அரிய மாக் களி, கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்பன, கரிய மா கிழங்குஅகழ்ந்தன கொணர்வன - காணாய்! |
தெரிவைமார்க்கு - மகளிர்க்கு; ஒரு கட்டளை எனச் செய்த திருவே - ஓர்உரைகல் போலச் செய்த திருவே!; கடுவன்கள் - ஆண் குரங்குகள்; அன்பு கொண்டு(முனிவர்பால்) அன்பு கொண்டு; பெரிய மாக் கனி - பெரிய மாம் பழம்; பலாக்கனி - பலாப் பழம்; பிறங்கிய வாழை அரிய மாக் கனி - விளங்கிய வாழையினது அரிய பெரும் பழம் ஆகியவற்றை; அளிப்ப - கொடுக்க; கரி மா -கரியவிலங்காகிய பன்றிகள்; அகழ்ந்தன - (தாம்) தோண்டி எடுத்தனவாகிய; கிழங்கு- கிழங்குகளை; கொணர்வன - கொண்டுவந்து தருவனவற்றைக்; காணாய் -. ஆண் குரங்குகள் மா, பலா, வாழை என்னும் பழங்களைத் தருகின்றன. பன்றிகள் கிழங்குகளத்தருகின்றன என்பதாம் மகளிரைப் படைத்தற்கு முன்மாதிரியாகச் செய்தமைத்துக் கொள்ளும் வடிவம்கட்டளை எனப்படும். அத்தகைய அழகு வடிவமே பிராட்டி என்றானாம். ‘கமலத்துக் கடவுள் தானே, .....உருவினுக்கு உலகம் மூன்றின் இருதிறத்தார்க்கும் செய்தவரம்பு இவர் இருவர்’ (2792) என்கிற சூர்ப்பணகை இங்கு ஒத்துக் கருதுக. 33 |