2079. ‘ஐவனக் குரல், ஏனலின்
     கதிர், இறுங்கு, அவரை
மெய் வணக்குறு வேய் இனம்
     ஈன்ற மெல் அரிசி,
பொய் வணங்கிய மா தவர்
     புரைதொறும் புகுந்து, உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து
     அளிப்பன - காணாய்!

     உன் கை வணத்த வாய்க் கிள்ளை - (சீதையே!) உன் கை போன்ற
செந்நிறவாயினையுடைய கிளிகள்;  ஐவனக் குரல் - மல நெல் கதிர்;
ஏனலின் கதிர் -தினைக் கதிர்; இறுங்கு - சோளக் கதிர்;  அவரை -
அவரைகள்;  மெய்வணக்குறு வேய் இனம்  ஈன்ற மெல் அரிசி -
உடலால் வளைவு பொருந்திய மூங்கிலிற் பிறந்தமென்மையான அரிசி
ஆகியவற்றை; பொய் வணங்கிய மாதவர் - பொய்யை ஓட்டிய
முனிவர்களது;  புரைதொறும் - ஆசிரமக் குடில்கள் தோறும்;  புகுந்து -
நுழைந்து; தந்து அளிப்பன- கொடுத்து அன்பு செய்வனவற்றை; காணாய்-.

     வணங்கி - வணங்கச் செய்த - இங்குத் தோல்வியைக் குறித்தது;
பொய்யைத் தோற்கடித்தமுனிவர்கள்.  கிளிகள் முனிவர்களுக்கு உணவு
கொண்டுவந்து  அன்புடன் கொடுத்து  உதவுகின்றனஎன்றாராம்.       34