2018. | ‘அசும்பு பாய் வரை அருந் தவம் முடித்தவர், துணைக் கண் தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு, விண் தருவான் விசும்பு தூர்ப்பன ஆம் என, வெயில் உக விளங்கும் பசும் பொன் மானங்கள் போவன வருவன - பாராய்!’ |
அசும்புபாய் வரை - ஊற்றெடுத்து நீர்பாயும் மலையிலே; அரும் தவம்முடித்தவர் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகிய; துணைக்கண்தசும்பு வேயந்தவர் ஒத்தவர் தமக்கு -தம் இரண்டு கண்களிலும் நீர்க்குடம் கவிழ்த்தாற்போல அன்பினால் நீர் பெருக விடுகின்றவர்களை ஒத்தவர்களாய நல்லோர்களுக்கு; விண்தருவான்- வீடு பேறாகிய விண்ணுலக வாழ்வினைத் தர வேண்டி; விசும்பு தூர்ப்பனஆம் என - ஆகாயத்தை மூடிக் கொள்வனவாகும் என்று சொல்லும்படி; வெயில் உக விளங்கும்-ஒளி சிந்தும்படி விளங்குகின்ற; பசும்பொன்மானங்கள்- பசிய பொன்னால் ஆகிய விமானங்கள்;போவன வருவன - போகின்றவற்றையும், மீள வருகின்றவற்றையும்; பாராய்-. சித்திரகூட மலை தேவர்கள் சஞ்சரிக்கும் இடம், ஆதலின், அவர்கள் விமானத்தில் ஏறிப்போவதும் வருவதுமாயிருத்தலின் வானமெங்கும் விமானத்தால் போர்த்தப்பட்டது போல் உள்ளது.அதுவே அருந்தவம் முடித்தவர்களுக்கு வீடுபேறு தருதற்கு விண்ணுலகு கொண்டு செல்ல வந்த விமானங்கள்போலவும் தோற்றம் அளித்தன. தசும்பு - குடம்; புறம் பொசிகின்ற மண்குடத்தைக்குறிக்கும். 36 |