சூரியன் மறைய, அந்திநேரம் வருதல் கலிவிருத்தம் 2083. | மா இயல் உதயம் ஆம் துளப வானவள், மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக, கா இயல் குட வரை, கால நேமிமேல், ஏவிய திகிரிபோல், இரவி ஏகினான். |
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் - பெருமை பொருந்திய இயல்பினை உடைய உதயகிரிஆகிய துளசி மாலை அணிந்த திருமால்; மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக -(தேவர்க்குப் பகையாகப்) பொருந்திய பகைமை கொண்ட இருள் நிறம் உடைய அசுரர்கள் கெட்டு அழிய; கா இயல் குடவரை கால நேமி மேல் - சோலை சூழ்ந்த அத்தமனகிரி ஆகிய (அசுரருள்மிகக் கொடியன் ஆகிய) கால நேமி என்பவன் மீது; ஏவிய திகிரி போல் - செலுத்தியசக்கரப் படையைப் போல; இரவி ஏகினான் - சூரியன் சேர்ந்தான். உதய மலையாகிய திருமால் அங்கிருந்து அத்தமன மலை ஆகிய கால நேமிமேல் அனுப்பியசக்கரம் போல மேற்குத் திசையில் சூரியன் சேர்ந்தான். குட வரையைக் கால நேமியாகவும்அங்கே சென்று சேர்ந்த சூரியனைச் சக்கரப் படையாகவும் கொண்டமையால் எதிர்த் திசையாக உதய மலையைச் சக்கரம் அனுப்பிய திருமாலாகச் சொன்னார். நரசிங்க அவதாரம் செய்து திருமாலாற் கொல்லப்பட்டஇரணியன் புத்திரன் காலநேமி. நூறு தலைகளையும் நூறு கைகளையும் உடையவன். அசுரர்களைச் சார்ந்து தேவர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு சத்தியலோகம் சென்றான். தன்னை அனைவரும் வணங்கித்துதிக்க வீற்றிருந்தான். மேலும் செருக்குற்றுத் தன் தந்தையைக் கொன்ற திருமாலைப், போருக்கழைத்தான். திருமாலின் சக்கரத்தால் அழிந்தான். 38 |