2085.ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன, புலரி போன பின்.
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ,
வான் எனும் மணித் தடம், மலர்ந்த எங்குமே!

     புலரி போனபின் - சூரியன் மறைந்த பிறகு; மகளிருக்கு ஆனனம்
அளித்ததாமரைப் பூ -
இதுகாறும் பெண்களுக்கு முகத்தைச்
செய்தனவாகிய மலர்ந்த தாமரைப் பூக்கள்;(இப்போது) நனி முகிழ்த்தன -
மிகவும் குவிந்தன;  வான் எனும் மணித்தடம் -வானம் போல உள்ள
அழகிய நீர்நிலையில்; மீன் என விளங்கிய - நட்சத்திரம் போல விளங்கிய;
வெள்ளி ஆம்பல் வீ - வெண்ணிறம் உள்ள ஆம்பல் மலர்கள்; எங்கும்
மலர்ந்த -
எவ்விடத்தும் மலர்ந்தன.

     மலர்ந்த தாமரை பெண்கள் முகம் போலும் ஆதலின், மலர்ந்த தாமரை
என்று சொல்வார்‘மகளிருக்கு ஆனனம் அளித்த தாமரை’ என்றார். இரவில்
தாமரை குவிதலும் ஆம்பல் மலர்தலும்இயல்பு.                      40