2086. | மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின; தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின; நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின; அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான். |
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின - (இரவு நேரம் வருதலின் ஏறி உறங்க)பெண் குரங்கும் ஆண் குரங்கும் மரங்களைப் பார்த்தன; தந்தியும் பிடிகளும் தடங்கள்நோக்கின - ஆண் யானையும் பெண் யானையும் தம் இருப்பிடத்துக்குச் சென்று சேரும்வழிகளைப் பார்த்தன; நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின- பழிப்பு இல்லாதபறவைகள் தம் கூடுகள் உள்ள நீண்ட வழியைப் பார்த்தன; அறிவை நோக்கினான் - மெய்ப்பொருளை நோக்கி அறிதற்கு உரிய இராமன்; அந்தியை நோக்கினான் - மாலைக்காலத்தில் செய்தற்கு உரிய கடமைகளைச் செய்யத் தொடங்கினன். குரங்குகள் இரவில் மரத்தின்கண் உறங்கல் இயல்பு; பறவைகள் தம் கூட்டை அடைதலும், யானைமுதலியன தம் இருப்பிடத்தை நாடிச் சேறலும் மாலை நேரத்தில் நிகழ்வன. தடம் -வழி. 41 |