இலக்குவன் அமைந்த குடிலில் இராமன் சீதையோடு குடிபுகுதல் 2088. | மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும், வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என, கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான். |
தவத்தின் எய்தினான் - தவம் காரணமாகக் காடு நோக்கி வந்த இராமன்; மாலைவந்து அகன்றபின் - மாலைப் பொழுது வந்து சென்ற பிறகு (இரவில்); வேலை உறைவிடம்வந்து மேயது ஆம் என - கடலானது தான் தங்கும் இடத்தை வந்து சேர்ந்தது என்று சொல்லும்படியாக; மருங்கிலாளொடும் - இடையில்லாத சீதையோடும்; கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி - அம்பை உமிழுகின்ற வில்லை உடைய தம்பியாகிய இலக்குவன்; கோலிய - செய்தமைத்த; சாலை வந்து எய்தினான் - சாலை இருக்கும் இடத்தைவந்தடைந்தான். நீலக்கடல் போன்ற நிறம் உடையவன் இராமன் ஆதலின், கடல் தன் உறைவிடம் போனதுபோல என்று உவமைப்படுத்தினார். 43 |