3. கைகேயி சூழ்வினைப் படலம்

209.வந்து மன் நகரில் தம்தம்
     வகைப்படும் உருவம் மாற்றி,
சுந்தரத் தடந்தோள் மாந்தர்
     தொல் உருச் சுமந்து தோன்றாது,
அந்தரத்து அமரர், சித்தர்,
     அரம்பையர், ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி
     இரைத்துமே எய்தி நின்றார்

     மன் நகர் - அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர்
முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார்
என்பதாம்; இந்திரை - திருமகள்.                              75-1