இராமன் சாலையில் சீதையோடு குடி புகுதல் 2093. | இன்னணம் இளையவன் இழைத்த சாலையில், பொன் நிறத் திருவொடும் குடி புக்கான் அரோ! - நல் நெடுந் திசைமுகன் அகத்தும், நம்மனோர்க்கு உன்ன அரும் உயிருளும், ஒக்க வைகுவான். |
இன்னணம் - இவ்வாறு; இளையவன் இழைத்த சாலையில் - இலக்குவன் செய்துஅமைத்த சாலையில்; நல் நெடும் திசை முகன் அகத்தும் - நல்ல பெரிய பிரமதேவனதுநெஞ்சத்திடத்தும்; நம்மனோர்க்கு - நம்மை ஒத்தவர்களுக்கு; உன்ன அரும்உயிருளும் - நினைத்தற்கரிய உயிரினுக்குள்ளும்; ஒப்ப - ஒரு தன்மையாக; வைகுவான்- என்றும் நீங்காது உடன் உறைகின்ற பரம்பொருளாகிய இராமன்; பொன்நிறத்திருவொடும் குடி புக்கான் - பொன்னிறம் படைத்த இலக்குமியின் அவதாரம் ஆகியசீதையோடும் குடி புகுந்தான். பிரமன் நெஞ்சிலும், உயிரிலும் உறைபவன் இச் சிறிய சாலையில் அவதார நிமித்தம் குடிபுகுந்தான் என்றது அரியனாய் எளியனாம் அவனது சௌலப்பயத்தைக் காட்டியது. ‘அரோ’அசை. 48 |