2096.என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இதுபோல்?’ என்றான் -
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

     என்று சிந்தித்து- என்று இவ்வாறு நினைத்து; இளையவற் பார்த்து-
இலக்குவனைப் பார்த்து; ‘இரு குன்று போலக் குவவிய தோளினாய்! -
இரு மலைகளைப்போலப் பொருந்திய தோள்களை உடையவனே!; நீ இது
போல் என்று கற்றனை? -
நீஇவ்வாறு குடில் அமைப்பதற்கு எப்பொழுது
கற்றுக் கொண்டாய்?;’ என்றான் - என்றுகேட்டவனாய்; துன்று தாமரைக்
கண் பனி சோர்கின்றான் -
நெருங்கிய தாமரை போலும்கண்கள் நீர்
சிந்தப் பெறுகின்றவனாக ஆனான்.

     இருவரும் ஒன்றாக வசிட்டர் பால் பயிலுதலின் இக்குடிசை அமைக்கும்
கலையை என்று கற்றாய்?என்று இலக்குவனைப் பார்த்து  மனம் நெகிழ்ந்து
கூறினான் என்க.                                              51