இராமன் நோன்பு செய்து இனிமையாக இருத்தல்  

2101.தேற்றித் தம்பியை, தேவரும் கைதொழ,
நோற்று இருந்தனன், நோன் சிலையோன்; இப்பால்,
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம் அரோ.

     நோன் சிலையோன் - வலிய வில்லை உடைய இராமபிரான்
(இவ்வாறு கூறி); தம்பியைத் தேற்றி-; தேவரும் கைதொழ - தேவர்ளும்
வணங்கும்படியாக; நோற்று இருந்தனன் - தவம் செய்து இருந்தான்;
இப்பால் - இனி; ஆற்றல் மாதவன்ஆணையின் போனவர் கூற்றின் -
வலிமைமிக்க முனிவராய வசிட்டருடைய கட்டளையை மேற்கொண்டுசென்ற
தூதுவர் செய்தியில்; உற்றது - நடந்த செய்தியை; கூறல் உற்றாம் -
சொல்லத் தொடங்கினோம்.

     வசிட்டன் அனுப்பப்பரதன்பால் கேகய நாட்டுக்குச் சென்ற தூதுவர்
செய்தி இனி வருவதாம் -‘அரோ’ அசை.                          56