தூதுவரிடம் பரதன் நலம் விசாரித்தல்  

2103.‘தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு’ என,
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்,
‘போதுக ஈங்கு’ என, புக்கு, அவர் கைதொழ,
‘தீது இலன்கொல் திரு முடியோன்’ என்றான்.

     ‘உந்தைசொல்லோடு தூதர் வந்தனர்’ என்-உன் தந்தையாகிய
தயரதன் சொல்லி அ.னுப்பியசெய்தியோடு தூதுவர் வந்துள்ளார் என்று
(வாயில்காவலர்) கூற; களிக்கின்றசிந்தையான்-மகிழ்ச்சி அடைகி்ன்ற
மனம் உடைய பரதன்; காதல்முந்தி- தந்தையின் சொற்களை அறியும்
ஆசை முற்பட்டு; ஈங்குப்போதுக’ என-(அவர்கள்) உள்ளே வருக
என்று கூற; அவர்-அத்தூதுவர்; புக்கு-உள்நுழைந்து; கைதொழ-
கைகளைக் குவித்து  வணங்கி நிற்க; ‘திருமுடியோன்-மாமுடி கவித்த
மன்னர் மன்னனாகிய தயரதன்; தீதுஇலன் கொல்’-யாதொரு தீமையும்
இல்லாமல் நலமாக இருக்கின்றானா?; என்றான்-என்று (தன்
தந்தையாருடைய  நலத்தை)விசாரித்தான்,.

     தந்தையின் உடல் நலனும் அவனால் ஆளப்பெறும் நாட்டின் நலனும்
அடங்கத் ‘தீது இலன்கொல்’ என்று விசாரித்தான். பரதனைத் தூதுவர்
காணும் போது அயோத்தியில் தயரதன்இறந்துபட்டுள்ளான் ஆதலின், அது
அவனை அறியாமல் அவன் வாக்கில் ‘நலமாய் உளனோ’ என்றுவராமல்
‘தீது இலன் கெரல்’ என்று வந்ததாகக் கவிஞன் காட்டுவது குறிப்புமொழி
எனப்பெறும்.                                                  2