தூதுவர் திருமுகம் கொடுத்தல்  

2105.மற்றும் சுற்றத் துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்தபின்,
‘இற்றது ஆகும், எழுது அரு மேனியாய்!
கொற்றவன்தன் திருமுகம் கொள்க’ என்றார்.

     மற்றும்- அதன்மேலும்; சுற்றத்து உள்ளார்க்கும்- உறவின்
முறையின் உள்ளவர்களுக்கும்; வரல் முறை- (கேட்க வேண்டிய) மரபு
முறைப்படி; உற்ற தன்மை- நிகழ்ந்துள்ள நன்மைகளை; வினாவி விசாரித்து
(அறிந்து);  உவந்த பின்- (பரதன்) மகிழ்ச்சி அடைந்த பிறகு; ‘எழுதுஅரு
மேனியாய்
- (அத் தூதுவர்) ஓவியத்தில் எழுதுதற்கு இயலாத அழகிய
திருமேனியை உடைய பரதனே!; கொற்றவன் தன்- மன்னனுடைய;
திருமுகம்-; இற்றது ஆகும்- இத் தன்மையுடையது ஆகும்; கொள்க’-
இதனைப் பெற்றுக்கொள்க; என்றார் -

     முன்னர் விசாரிக்கப்படுபவர்,பின்னர் விசாரிக்கப்படுபவர் என்றும்,
இன்னாரைஇவ்வாறு விசாரித்தல் வேண்டும். என்றும் உலக வழக்கில் உள்ள
முறைப்படி விசாரித்தலை‘வரல் முறை’ என்றார். இத் தூதுவர் ஓலை
கொடுத்து  நிற்பார் என்னும் வகையைச் சார்ந்த தூதுவர்.  தான் வகுத்துக்
கூறுவான். கூறியது கூறுவான்,  ஓலை கொடுத்து  நிற்பான் என்னும்
மூவகையினர் தூதுவர் இவரை முறையே தலை, இடை, கடை என வழங்கல்
நூல் வழக்கு. (குறள். பரி. உரை. 687)                               4