பரதன் திருமுகம் பெற்று மகிழ்தல்  

2106.என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான்,
பொன் திணிந்த பொரு இல் தடக் கையால்,
நின்று வாங்கி,  உருகிய நெஞ்சினான்
துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான்.

     என்றுகூறலும்- என்று தூதுவர் கூறிய உடனே; ஏத்தி-(பரதன்
அத் திருமுகத்தக்)கொண்டாடி வணங்கி; பொன் திணிந்தபொரு இல்
தடக்கையால்
- பொன்னாற் செய்த அணிகளைஅணிந்த ஒப்பற்ற நீண்ட
கைகளால்; நின்று- எழுந்து நின்று; வாங்கி-வாங்கிக்கொண்டு;உருகிய
நெஞ்சினான்
- (அன்பினால்) கரைந்த மனம் உடையனாய்; நாள்மலர்
துன்று சென்னியில்
- அன்றவர்ந்த மலர்கள் நெருங்கச் சூடப்பெற்ற
தன்தலை மீது; சூடினான்- (அத்திருமுகத்தை)அணிந்துகொண்டான்.

     பொன்னாற் செய்த அணி நெருக்கமாகச் கைகளில் இருத்தலின்
கையைப் ‘பொன் திணிந்த’என்றார், ஏத்துதல், நின்று வாங்குதல், தலைமேற்
கொள்ளுதல் பரதன் அன்பையும், மன்னன்சார்பில் வந்த திருமுகத்தின் பால்
காட்டும் மதிப்பையும் காட்டும்.                                    5