பரதன் சத்துருக்கனனோடு அயோத்திக்குச் செல்லுதல்  

2108.வாள் நிலா நகை தோன்ற, மயிர் புறம்
பூண, வான் உயர் காதலின் பொங்கினான்,
தாள் நிலாம் மலர் தூவினன் - தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவவே.

     தம் முனைக் காணலாம் எனும் ஆசை- (பரதன்) தன்
முன்னவனாகிய இராமனைக் காணப்போகிறோம் என்னும் ஆர்வம்; கடாவ-
(மேன்மேலும் மிகுந்து) உள்ளத்தைத் தூண்டுதலினால்; வாள்நிலா நகை
தோன்ற
- ஒளி நிலாப்போன்ற மகிழ்ச்சிச் சிரிப்புத் தோன்றவும்;புறம்
மயிர்பூண
- உடம்பின் வெளிப்பகுதியெல்லாம் மயிர்க்கூச் செறிந்து
அழகுறத் தோன்றவும்; வான் உயர் காதலின்- மிக உயர்ந்த அன்பினால்;
பொங்கினான்- நிரம்பி வழியப்பெற்றவனாய்;தாள்- (மனத்தால்)
இராமபிரான் திருவடிகளில்; நிலாம் மலர்- பொருந்திய மலர்களை;
தூவினன்- பாவனையால் தூவி வழிபட்டான்.

     மகிழ்ச்சி மிகப் பெற்றவர்க்குச் சிரிப்புத் தோன்றல் மயிர்க்கூச் செறிதல்
இயல்பு.“ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயங் கூறுவார் ‘மயிரினைச் செவ்வன்
நின்றன’ என்பது போலக்கொள்க.” (தொல். பொருள். மெய்ப். பேரா. உரை
14) என்பதும் காண்க.

     தம் முன்னைக் காணும்  பெருவிருப்புத் தலைதூக்குதலின் இராமன்
திருவடிகளைப் பாவனையால்கண்டு மலர் தூவித் தொழுதான் என்க.
இராமபிரான் மாட்டுப் பரதனுக்குள்ள பெருங் காதலும், பக்தியும் இங்கே
சொல்லப்பெறுவது  கதையின் பின்னோட்டத்தில் பரதன் உளப்பாங்கைப்
பெரிதும் சித்திரிக்கப்பயன்படும். நிலாம்மலர் - விளக்கம் சிறந்த மலர் எனப்
பொருள்கூறுலும் ஒன்று. முடங்கலின்மீது மலர் தூவினான எனல்
ஏற்புடைத்தாயின் கொள்க. ‘ஏ’ ஈற்றசை.                             7