யாவரும் இராமனை வந்து அடைதல் 2467. | சேனை வீரரும், திரு நல் மா நகர் மான மாந்தரும், மற்றுளோர்களும், ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,- கோனை எய்தினார் - குறையும் சிந்தையார். |
சேனை வீரரும் - படைவீரர்களும்; திருநல் மாநகர் - செல்வம் நிறைந்தநல்ல பெரிய அயோத்தி நகரில் உள்ள; மான மாந்தரும் - பெருமை படைத்தவர்களும்; மற்றுளோர்களும் - வேறுள்ளவரும்; ஏனை வேந்தரும் - பிற அரசர்களும்; பிறரும்யாவரும்-; கோனை- இராமனை; குறையும் சிந்தையார் - அழிந்து வருந்தும் மனம்உடையவராய்; எய்தினார் - வந்தடைந்தார்கள். மான மாந்தர் என்பதற்கு முன்பு கூறியாங்கு அமைச்சர்கள் எனினும் அமையும். அனைவரும் துக்கத்தில் மூழ்கியவராய் இராமனை நெருங்கிவந்து சேர்ந்தார்கள் என்க. 93 |