2113.துளைமுகத்தின் சுருதி விளம்பின;
உளை முகத்தின உம்பரின் ஏகிட,
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே.

     சுருதி- வேத ஒலி; துளை முகத்தின்- உள் துளையுடைய குழலின்
மூலமாக; விளம்பின- ஒலிக்கப்பெற்றன; உளை முகத்தின- தலையாட்டம்
பொருந்தியனவும்; உம்பரின் ஏகிட-ஆகாயத்தில் செல்வதற்கு;
விளைமுகத்தன- வல்ல செலவினையுடையவும்; வேலையின் மீது செல்-
கடலின் மீது, செல்லும் ஆற்றல் உடையனவும் (ஆகிய); வளை முகத்தன-
வளைந்த முகத்தினைஉடைய; வாசியும்- குதிரைகளும்; வந்த-
இப்படைக்குழுவில் வந்தன.

     “குழுவு நுண் தொளை வேய்” என்றார் முன்னும். (2073.) குதிரைப்
படை வருணனையில் குழலிசைபற்றிய குறிப்பு ஏன் - விளங்கவில்லை.   12