பரதனும் படைகளும் கோசல நாடு அடைதல் 2119. | ஆறும் கானும் அகல் மலையும் கடந்து ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை நாறு பாய் வயல் கோசலம் நண்ணினாள். |
(பரதன்)ஏழ் பகல்- ஏழு நாள்கள்; நீந்தி-வழி நடந்து சென்று; ஆறும் கானம் அகல் மலையும் ஏறிக் கடந்து-ஆறும், காடும், அகன்ற மலையும் ஏறித் தாண்டிச் சென்று; பின்-பிறகு; எந்திரத்து ஊறுபாகு- கரும்பாலைகளில் ஊறுகின்ற வெல்லப்பாகு; மடை உடைத்து- (வயல்களில் நீர்பாய்ச்சஉள்ள வாய்க்கால் வழிச் சென்று) மடைகளை உடைத்துக்கொண்டு; ஒள் முளை நாறு வயல் பாய்-சிறந்த முளையுடைய நாற்றுகள் பொருந்திய வயலிலே பாய்வதற்கு இடனாக உள்ள; கோசலம்- கோசல நாட்டை; நண்ணினான் - சேர்ந்தான். அயோத்தியிலிருந்து சென்ற பரதன் கேகய நாட்டை ஏழு நாளில் நண்ணினான் என்று முன்னர்ச் சொன்னதை (1311.) ஈண்டு நினைவு கூர்க. கான் கடந்து, மலைஏறி, ஆறு நீந்தி எனற் கேற்ப, ‘ஆறும் கானும் மலையும்’ எனவும், ‘கடந்து, ஏறி, நீந்தி’எனவும் அழைத்த அழகு அறிந்து இன்புறத்தக்கது. 18 |