2121. | பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச் சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி; முதிர்ந்து, கொய்யுநர் இன்மையின், மூக்கு அவிழ்ந்து உதிர்ந்து உலர்ந்தன, ஓண் மலர் ஈட்டமே. |
தேம்கனி - இனிய பழங்கள்; (கொய்யுநர் இன்மையின்) சாறு பிதிர்ந்து - பறித்துண்பார் இல்லாமையால் சாறு வெளிப்பட்டு; பெருந்துறைமண்டிட- பெரியநீர்த்துறைகளில் நெருங்கிப் பாய; சிதர்ந்து சிந்தி அழிந்தன -சிதறிக் கெட்டு வீணாகின; ஒள்மலர் ஈட்டம் - ஒளி படைத்த (அழகிய)மலர்த்தொகுதி; கொய்யுநர் இன்மையின்- பறித்துச் சூடுவார் இல்லாமையால்; மூக்குஅவிழ்ந்து - தம் காம்பு கழலப்பெற்று; உதிர்ந்து உலர்ந்தன - (கீழே) உதிர்ந்து காய்ந்து போயின. நாட்டில் உள்ளார் துயர மிகுதியால் கனி உண்ணுதலையும், மலர் சூடுதலையும் துறந்தனர்.இப்பாடலில் “கொய்யுநர் இன்மையின்” என்பதனை இடைநிலைத் தீவகவணி எனக் கொண்டு ‘தேம்கனி’, ‘மலர் ஈட்டம்’ என்ற இரண்டனோடும் முன்னும் பின்னும் கூட்டுக. இது ஊசற் பொருள்கோள் எனவும் பெறும். ‘ஏ’ ஈற்றசை. 20 |