2122.‘ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம்’ என
ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால்,
பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால்
சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே.

     சாலி - செந்நெற் பயிர்கள்; ‘இதற்கு ஏய்ந்த காலம் இது ஆம்’ என
ஆய்ந்து
- இப்பயிரை விளைத்தற்கும்,  அறுத்தற்கும் பொருத்தமான காலம்
இதுவாகும் என்று ஆராய்ந்து; அரிகுநர் - அரிகின்றவர்களாகிய;  மள்ளர்
இன்மையால்
- உழவர்கள் அத்தொழில்புரிபவராய் இல்லாமையால்;
பாய்ந்த - (பறிப்பார் இல்லாமையால்) சிந்தி அழிந்த; சூதப் பசு நறுந்
தேறலால்
- மாம்பழத்தின் நல்ல இனிய சாற்றினால்; சாய்ந்து- தலை
சாய்ந்து; ஒசிந்து - வளைந்து அடி முறிந்து; முளைத்தன - (தம்
தானியங்கள் கீழே விழ மீண்டும்) முளைத்தன.

     தேறல் - மது,  இங்கு அது போன்ற மாம்பழச் சாற்றை உணர்த்தியது.
காலம் கருதிப் பயிரைஅறுக்காத போது  அவை மீண்டும் நிலத்திற் சிந்தி
முளைத்ததாகக் கூறினார்.  மள்ளர்சோதித்தலின் அறுத்திலர் என்க. ‘ஏ’
ஈற்றசை.                                                    21