2126.நகை இழந்தன, வாள் முகம்; நாறு அகிற்
புகை இழந்தன, மாளிகை; பொங்கு அழல்
சிகை இழந்தன, தீவிகை; தே மலர்த்
தொகை இழந்தன, தோகையர் ஓதியே

     வாள்முகம் - (கோசல நாட்டவரது)  ஒளி படைத்த முகங்கள்;  நகை
இழந்தன
- மகிழ்ச்சிச் சிரிப்பை இழந்தன;  மாளிகை - (அந்நாட்டு)
மனைகள்;  நாறு அகில்புகை இழந்தன - மணம் வீசுகின்ற அகிற்புகை
இழந்தன;  தீவிகை - (ஏற்றிய) தீபவிளக்குத் தண்டுகள்;  பொங்கு அழல்
சிகை இழந்தன - மேல் நோக்கி எரியும் நெருப்புச் சுடரை இழந்தன;
தோகையர் ஓதி - மகளி்ரின் கூந்தல்;  தே மலர்த் தொகை இழந்தன-
தேன் பொருந்திய மலர்த் தொகுதிகளை இழந்தன.

     ‘இழந்தன’ என்பது நான்கு முறை ஒரு பொருளிலேயே வருதலின்
‘சொற்பொருட் பின்வருநிலையணி’. தீவிகை என்பது ‘தீபிகா’ என்னும் வட
சொல்லின் தமிழ் வடிவம். பெண்கள்கூந்தலில் மலர் சூடவில்லை என்பதை
‘ஓதி மலர்த்தொகை இழந்தன’ என்றார். ‘ஏ’ ஈற்றசை.                25