2128.நாவின் நீத்து அரு நல் வளம் துன்னிய,
பூவின் நீத்தென, நாடு, பொலிவு ஓரீஇ,
தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட,
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே.

    நாவின் நீத்து  அரு நல் வளம் துன்னிய- நாவினால் சொல்ல
இயலாத நல்ல வளங்கள் நெருங்கியிருக்கப்பெற்ற; நாடு - கோசலநாடு;
பூவின் நீத்தென - தாமரைப்பூவை இழந்ததாக; தேவி - அத்தாமரைப்
பூவில்  உறைபவளாகிய திருமகள்;  நீத்து - (அந்நாட்டை விட்டு) நீங்கி;
அருஞ்சேண் நெறி- பின்பற்றிச் செல்லுதற்கரிய நெடுந்தொலைவாகிய
வழியிலே;  சென்றிட -சென்றிடுதலான்;  பொலிவு ஒரீஇ - தன் அழகும்
கவர்ச்சியும் நீங்கி;  ஆவி நீத்த உடல் - உயிர் போன உடல்; எனல் -
என்று சொல்லுமாறு;  ஆயது -ஆகிவிட்டது.

     “தாமரை  நீத்தெனப் பார் துறந்தனள் பங்கயச் செல்வியே” (2120)
என்பதை ஒப்புநோக்குக. ‘உயிர் போன உடல்’ சுற்றியிருப்பார்க்கு  அச்சம்
தருதல் போல இந்நாடும்காண்பார் அஞ்சுமாறு பொலிவிழந்ததாம். “மன்னன்
உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறநா.186) என்பவாதலின் மன்னனை இழந்த
நாடு உயிரற்ற  உடல் போல ஆயிற்று என்றார். ‘ஏ’  ஈற்றசை.         27