பொலிவழிந்த நாட்டைக் கண்ட பரதன் துன்புறுதல் 2129. | என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து, ஒன்றம் உற்றது உணர்ந்திலன், உன்னுவான், ‘சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்’ எனா, நின்று நின்று, நெடிது உயிர்த்தான்அரோ! |
என்ற - முன் கூறியவாறு உள்ள; நாட்டினை - கோசல நாட்டை; நோக்கி - (பரதன்) பார்த்து; இடர் உழந்து - பெருந்துன்பத்தாற் கலங்கி; உற்றது ஒன்றும் உணர்ந்திலன் - நிகழ்ந்த செய்திகள் ஒன்றும் உணராதவனாய்; ‘சென்றுகேட்பது ஓர் தீங்கு’ - நாம் போய்க் கேட்கப் போகின்ற தீய செய்தி ஒன்று; உளதுஆம்’ எனா - இப்பொழுது நேர்ந்துள்ளதாகும் என்று; உன்னுவான் - கருதியவனாய்; நின்று நின்று - தயங்கிச் சோர்ந்து; நெடிது உயிர்த்தான் - பெருமூச்சுவிட்டான். நாட்டைக் கண்ட அளவிலே தீய செய்தியைக் கேட்கப்போகிறோம் என்னும் நினைவுஉண்டாயிற்று என்பதாகும். துன்ப மிகுதியில் பெரு மூச்சு எறிதல் வழக்கு. ‘அரோ’ஈற்றசை. 28 |