கொடி இழந்த நகர் காணல்  

2131.‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய்’ அமுது
உண்டு போதி’ என்று, ஒண் கதிர்ச் செல்வனை.
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன,
கண்டிலன், கொடியின் நெடுங் கானமே,

    ஒண் கதிர்ச் செல்வனை - ஒளி படைத்த ஆயிரம் கதிர்களைத் தன்
செல்வமாக உடைய கதிரவனை (நோக்கி); ‘அண்டம்முற்றும் - எல்லா
உலகங்களும் அடங்க; திரிந்து அயர்ந்தாய் - (நீ) சுற்றிஅலைந்து
சோர்ந்து  போனாய்;  அமுது உண்டு போதி - (எங்கள் நகரிலே) தங்கி
உணவுஅருந்திச் செல்வாயாக; என்று -;  விண்தொடர்ந்து - (அக்
கதிரவன் ) செல்லும் வான்அளாவித் தொடர்ந்து சென்று; விலக்குவ
போல்வன
- (அப்பரிதியைத்) தடுப்பனபோல்வவாகிய; கொடியின் -
(அயோத்தி நகரக்) கொடிகளின்; நெடுங்கானம் - பெரியகாட்டை;
கண்டிலன் - (பரதன்) காணப்பெறாதன் ஆனான்.

     அந்நகரத்துப் பலவிடங்களிலும் முன்பு கொடிகள் இருந்தமையும்
இப்போது இல்லாமையும் கூறப்பட்டன. வானளாவக் கொடிகள்
உயர்ந்திருப்பதும் தடுத்தாற்போலஅசைவதும், சூரியன் செலவைத்
தவிர்த்துச் சோர்வு நீக்கி உண்டு இளைப்பாறிச் செல்ல நகர்க்கு
அழைப்பதாகக் கற்பனை செய்யப்பெற்றது. இது தற்குறிப்பேற்றவணி. கானம் -
கொடிகளின் மிகுதி- ‘காடு’ என்னும் பொருள் இங்கே தொகுதி  எனப்
பொருள்பட்டது, மரங்களில் தொகுதி காடு, ஆதலின் ‘ஏ’ ஈற்றசை.      30