இயக்கம் இன்மையால் அழகு இழந்த வீதிகள் 2136. | தேரும், மாவும், களிறும், சிவிகையும், ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால், யாரும் இன்றி, எழில் இல; வீதிகள், வாரி இன்றிய வாலுக ஆற்றினே, |
தேரும் - தேர்களும்; மாவும் - குதிரைகளும்; களிறும் - யானைகளும்; சிவிகையும் - பல்லக்குகளும்; ஊரும் பண்டியும் - (மக்கள்) ஏறிச்செல்லுகின்ற வண்டிகளும்; ஊருநர் இன்மையால் - ஏறிச் செல்பவரும் செலுத்துபவரும் இன்மையால்; வீதிகள் - (அயோத்திநகரின் ) தெருக்கள்; வாரி இன்றிய -நீர்வருவாய் இல்லாது போன; வாலுக ஆற்றினே - வெண்மணற் பரப்பையுடைய ஆற்றைப் போல;யாரும் இன்றி- இயங்குபவர் எவரும் இல்லாமல்; எழில் இல - அழகு இழந்தன. நீரற்ற வெறுமணல் பரவிய நதி - இயக்கம் அற்ற வீதிகளுக்கு உவமை ஆயிற்று; உவமையணி.வாலுகம்- வெண்மணல். வாரி - வருவாய். யாற்றுக்கு வருவாய் நீர் ஆதலின் நீர் எனப் பொருள்உரைத்தாம். வீதிக்கு அழகு மக்கள் இயங்குதல் ஆகலின் யாரும் இயங்காத வீதிகள் அழகிழந்தன என்றார். ‘ஏ’ ஈற்றசை. 35 |