சத்துருக்கனன் மறுமொழி 2139. | குரு மணிப் பூண் அரசிளங் கோளரி இரு கை கூப்பி இறைஞ்சினன், ‘எய்தியது ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ் திரு நகர்த் திரு தீர்ந்தனள் ஆம்’ என்றான். |
குரு மணிப் பூண் - நிறம் அமைந்த மணிக் கற்கள் அழுத்திய அணிகளை (அணிந்த); அரசு இளங் கோளரி- அரசிளஞ் சிங்கம் ஆகிய சத்துருக்கனன்; இரு கை கூப்பிஇறைஞ்சினன் - தன் இரண்டு கைகளையும் குவித்து (ப் பரதனை) வணங்கி; (இப்போது இந்நகரின் நிலையைப் பார்த்தால்) ‘எய்தியது உறு துயர் - நேர்ந்துள்ள மிக்கதுயரம்; ஒரு வகைத்து அன்று - ஒரு தன்மைப்பட்டது அன்று; (அன்றியும்) ஊழி வாழ்- கற்ப முடிவுக்காலம் வரையும் வாழக்கூடிய; திருநகர் திரு - சிறந்த இந்த நகரத்துச்சீதேவி (திருமகள்); தீர்ந்தனள் ஆம்’ - நகரத்தை விட்டு அடியோடு போய்விட்டான்ஆகும்; என்றான் -. எல்லாரினும் இளையவனும், தயரத மாமன்னனின் மகனும் ஆதலின் சத்துருக்கனன் ‘அரசிளங்கோளரி’ எனப் பெற்றான். மூத்தோர்பால் ஒன்று சொல்லும் போது வணங்கிக் கூறல் மரபு. உறு -மிகுதி. “அவைதாம், உறு, தவ, நனி என வரூவும் மூன்றும், மிகுதி செய்யும் பொருள என்ப” (தொல்- சொல் உரி. 3) என்பது காண்க. ஊழி வாழ்தலை நகர்க்கும், திருவுக்கும் ஏற்புழிஏற்றிக் கொள்க. 38 |