1421. ‘உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும்,
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்,
சமைத்த தோல் வலி தாங்கினர் ஆயினும்,
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே,

     ‘உமைக்கு நாதற்கும் - உமாதேவியின் கணவனாகிய
சிவபெருமானுக்கும்; ஓங்கு புள்ஊர்திக்கும் - உயர்ந்த கருடனை
வாகனமாக உடைய திருமாலுக்கும்; இமைப்பு இல் நாட்டம்- இமையாத
கண்கள்;  எட்டு உடையானுக்கும் - எட்டு உடைய நான்முகனுக்கும்;
சமைத்த -பொருந்திய; தோள்வலி  - தோள் ஆற்றலை;  தாங்கினர் -
பெற்றுடையராக (அரசர்);  ஆயினும் - இருந்தாலும்;  அமைச்சர் சொல்
வழி -
மந்திரியரது ஆலோசனைவழியில்;  ஆற்றுதல் - அரசாட்சியைச்
செய்தல்;  ஆற்றல் - ஆண்மையாகும்.’

     மும்மூர்த்திகளைப் போலத் தோள்வலி பெற்ற அரசரும்அமைச்சர்
சொற்கேட்டு ஆட்சி நடத்தல் வேண்டும் என்பதாம். நான்முகன் ஆதலால்
எட்டுக் கண்கள்உடையான் ஆயினன். ‘ஓர்’ அசை. உ (அம்மா) மா.
(வேண்டாம்) அம்மா வேண்டாம் என்று சொல்லியபடியால்உமா என்று
பெயராயிற்று என்பர். உமா,  உமை என வந்தது, அமைச்சர் - அமாத்தியர்;
அருகிருந்து ஆவன சொல்வார். ‘உழையிருந்தான்’ எனப் பெயர் உரைப்பர்
திருவள்ளுவர், (குறள். 638.) ‘ஏ’காரம் ஈற்றசை.                     23